விழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


விழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Sept 2024 5:56 PM IST (Updated: 13 Sept 2024 6:32 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் துன்பப்படுவதும், துயரப்படுவதும் தொடர்கதையான ஒன்றாகும். அந்த வகையில், தி.மு.க. அரசு பதவியேற்ற இந்த 40 மாத காலத்தில், நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டு வருவதாக தி.மு.க. அரசு நாள்தோறும் வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில்,

தி.மு.க. அரசு, விழுப்புரம் நகராட்சி, மருதூர் பகுதியில் உள்ள நகராட்சி இடுகாட்டை ஆக்கிரமித்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதாகவும், அவ்வாறு அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இடுகாட்டிற்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதுடன், அந்த இடத்தை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது; நாள்தோறும் குவிந்து வரும் குப்பைகள் அகற்றப்படாதது; விழுப்புரம் மையப் பகுதியில் அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் சீரமைக்கப்படாததால் சாக்கடையாகவும், குப்பைக் கூடாரமாகவும் மாறியுள்ளது. இவைகளின் காரணமாக நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரியாக எரியாத காரணத்தால் மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். நகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியும், சேரும். சகதியுமாக இருப்பதால், சாலைகளில் பயணம் செய்வதற்கு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும், இதன் காரணமாக பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதாகவும், கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டக் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விழுப்புரம் நகராட்சி, மருதூர் பகுதியில் உள்ள இடுகாட்டை ஆக்கிரமித்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும்; நகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, இங்கு நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்திட வலியுறுத்தியம்; குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்திடக் கோரியும்; கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மாவட்ட காவல் துறையைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 20.9.2024 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story