ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 May 2024 10:21 AM IST (Updated: 28 May 2024 10:49 AM IST)
t-max-icont-min-icon

'இந்தியா' கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் வேட்பாளர் தேர்வு பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 1-ந் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறார்.


Next Story