ஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே மூழ்கியது - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்


ஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே மூழ்கியது - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
x
தினத்தந்தி 7 Oct 2024 9:37 AM GMT (Updated: 7 Oct 2024 12:08 PM GMT)

மகாமகத்தில் நடந்த உயிரிழப்பை எடப்பாடி பழனிசாமி மறக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. வானில் போர் விமானங்கள் நிகழ்த்திய வர்ணஜாலத்தை லட்சக்கணக்கான மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள்.

தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடுகள் செய்திருந்தால், இவ்வளவு பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது. தமிழ்நாடு அரசின் செயலற்றத்தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திட்டமிட்டு முன்கூட்டியே அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கக்கூடாது. மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. இது உளவுத்துறையின் தோல்வி. இதைச் செய்யத் தவறியது திமுக அரசு. அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசியல் செய்யவில்லையா? இந்த உயிரிழப்புகளுக்குக் திமுக அரசே காரணம். இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது. விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது. இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "வான் சாகச நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விழாவுக்கான எல்லாவிதமான முன்னேற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. உயிரிழப்பு தொடர்பான முழுமையான அறிக்கை வெளிவரவில்லை. அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இது மத்திய அரசு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சி. கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதா பங்கேற்றபோது நிகழ்ந்த இறப்புகளை எடப்பாடி பழனிசாமி மறக்கக் கூடாது. ஜெயலலிதாவின் மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டத்தில் சிக்கி 6 பேர் இறந்தனர். ஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல" என்று அவர் தெரிவித்தார்.


Next Story