சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை


சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி  படுகொலை
x
தினத்தந்தி 5 July 2024 8:34 PM IST (Updated: 5 July 2024 9:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இவர் இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. உடற்கூராய்விற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2006 ஆம் ஆண்டு, சுயேட்சையாக நின்று சென்னை மாமன்ற உறுப்பினரானார். 2007 ஆம் ஆண்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில், ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story