அரசு பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்
அசோக் நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பிற்போக்குத்தனமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மகா விஷ்ணு என்பவர் பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினார்.
மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணு, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்தார்.
மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத்திறனாளிகளாக பிறக்கவும் அதுவே காரணம் என்றும் கூறினார். மறுபிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றும் கூறினார்.
அப்போது, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் சங்கரை மிரட்டும் வகையில் மகாவிஷ்ணு பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை குழு அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளது. அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.