எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை


எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
x
தினத்தந்தி 5 July 2024 10:20 AM IST (Updated: 5 July 2024 10:35 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 25-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், அவரை உடனிருந்து கவனித்து கொள்ள வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் மனுவோடு, முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வாதங்கள் நேற்று நடைபெற்றது. அப்போது, இடைக்கால முன்ஜாமீன் தேவையில்லை. முன்ஜாமீன் மனுவை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கூலி நாயக்கனூர் கிராமத்தில் யுவராஜ் என்பவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வராஜ், கவுண்டபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மற்றும் ரகு ஆகியோர் வீடுகளில் நில மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story