சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் அத்துடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் சம உரிமையும், சம வாய்ப்பும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிச்சயமாக எடுக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.