ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்; ஒருவர் கைது


ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 July 2024 3:58 PM IST (Updated: 10 July 2024 5:20 PM IST)
t-max-icont-min-icon

நகைகள் மற்றும் பணத்தை சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் போலீசில் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது லட்சுமணன் (வயது 25) என்பவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை இருந்துள்ளது.

இந்த பணம் மற்றும் நகைகள் குறித்து லட்சுமணனிடம் கேட்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை ரெயில் நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது நகை மற்றும் பணத்தை சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரொக்க பணம் ரூ. 15 லட்சமும், ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 2.45 கிலோ தங்க நகைகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் என தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story