திமுகவுடன் எப்போதும் பா.ஜனதா கூட்டணி வைக்காது - அண்ணாமலை பேச்சு


திமுகவுடன் எப்போதும் பா.ஜனதா கூட்டணி வைக்காது -   அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2024 3:40 PM GMT (Updated: 25 Aug 2024 3:44 PM GMT)

இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர் என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

காமராஜர், எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனக்கு பாடம் எடுக்க வர வேண்டாம். திமுக அரியணை உதயநிதிக்கு போகும்போது கலவரம் வெடிக்கும் என்பதை நடிகர் ரஜினி மறைமுகமாக சுட்டிகாட்டியுள்ளார். ரஜினி அவரது பாணியில் முதல்-அமைச்சரிடம் மறைமுகமாக கூறியுள்ளார். பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.

திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம். 2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பா.ஜனதா நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது. திமுகவுடன் எப்போதும் பா.ஜனதா கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும். நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள்தான். இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேசிய பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மீகத்தை பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை பற்றி பேசியவர்கள், இன்று முருகனுக்கு மாநாடு நடத்துகிறார்கள் என்றால் இதுதான் பாஜகவின் முதல் வெற்றி. பெரியார் பெரியார் என்று கூறியவர்கள் இன்று முருகா முருகா என்று சொல்கிறார்கள் என்றார்.


Next Story