திருமண மோசடி செய்த கல்யாண ராணிக்கு ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த வழக்கில் கைதான கல்யாண ராணி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளரை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த இளம்பெண் கல்யாண ராணி என்கிற சத்யாவை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த வழக்கில் கைதான கல்யாண ராணி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கூறி ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர்தான் புரோக்கராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வருகிறார்கள். சத்யாவிடம் தொடர் விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
திருமணம் நடைபெற்ற 2 நாளில் சத்யாவின் செல்போனை அவரது புதுக்கணவர் பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த புகைப்படங்கள் அவரை தலை சுற்ற வைத்துள்ளது. அதில் சத்யா பல ஆண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சத்யாவின் சுயரூபம் தெரிந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கும்படி புதுமாப்பிள்ளை விட்டுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.