ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்


ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் பதிவேற்றம்..  தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 May 2024 10:26 PM GMT (Updated: 29 May 2024 12:23 AM GMT)

பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.

சென்னை,

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் ஒருவர், அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அவர், 'வீரா டாக் டபுள் எக்ஸ்' என்ற 'யூடியூப்' சேனலுக்கு காதல் தொடர்பாக இரட்டை அர்த்த வசனங்களுடன் ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பேட்டி குறிப்பிட்ட 'யூடியூப்' சேனல் மற்றும் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த பெண் தெரிவித்த கருத்துக்கு கேலி-கிண்டல்கள் எழுந்தது.

பேட்டி அளித்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. சகோதரர் கண்காணிப்பில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடி வருகிறார். தான் அளித்த பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பதற்றத்திலும், மன உளைச்சலிலும் அந்த பெண் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர், எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது தோழிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம், "நான் அந்த 'யூடியூப்' சேனலுக்கு பேட்டி தர முதலில் மறுத்தேன். ஆனால் அவர்கள் எனது அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட மாட்டோம் என்று சொன்னார்கள். அந்த நம்பிக்கையில்தான் நானும் ஜாலியாக கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் எனது அனுமதி இல்லாமல் எனது பேட்டியை வெளியிட்டு அவமானப்படுத்திவிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட 'யூடியூப்' சேனல் மீதும், பேட்டி எடுத்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பெண் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட 'யூடியூப்' சேனலை நடத்தி வந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் 1-வது தெருவை சேர்ந்த ராம் (வயது 21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த அண்ணாநகர் விஜயா தெருவை சேந்த ஸ்வேதா (31) என்ற பெண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story