கோவையில் அண்ணாமலை தோல்வி: சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி


கோவையில் அண்ணாமலை தோல்வி: சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி
x
தினத்தந்தி 6 Jun 2024 5:55 AM GMT (Updated: 6 Jun 2024 6:00 AM GMT)

கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உடன்குடி,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணியும் என மொத்தம் 37 பேர் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர்.

தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அண்ணாமலையை 1 லட்சத்து 17 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கோவையில் அண்ணாமலையின் தோல்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி அருகே உள்ள முந்திரிதோட்டம் ஜெயசங்கர் என்பவர் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை முழுமையாக வெற்றி பெறுவார், வெற்றி பெறவில்லை ஆனால் நான் மொட்டையடிப்பேன் என்று மாற்று கட்சி நண்பர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் அண்ணாமலை தோல்வி அடைந்ததையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பரமன்குறிச்சி பஜாரில் உள்ள சாலையில் ஜெயசங்கர் அமர்ந்து கொண்டு மொட்டை போட்டுக்கொண்டு பஜாரில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்து பந்தயத்தை நிறைவேற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் உடன்குடி ஒன்றிய பாஜகவின் நலதிட்ட பிரிவு பொதுச்செயலாளராக இருக்கிறார்.


Next Story