விமான பயணிகளிடம் நாளை முதல் குரங்கம்மை பரிசோதனை - மா.சுப்பிரமணியன்
குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.
சென்னை,
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வழிகாட்டலின் படி தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது. விமான பயணிகளிடம் நாளை முதல் குரங்கம்மை பரிசோதனை நடத்தப்படும். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.
ஸ்கேனிங், ஸ்கிரினிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.