அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது. தனிநபரை தாக்கி பேசக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகள் அதிமுகவுக்கு காவல்துறை விதித்துள்ளது.
அதிமுக உண்ணாவிரத போராட்டத்தையொட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.