நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் - ஓ.பன்னீர் செல்வம்


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் - ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 11 July 2024 8:27 AM GMT (Updated: 11 July 2024 9:24 AM GMT)

அ.தி.மு.க. தோல்விக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் திரு உருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மாவீரன் புகழ் உலகம் இருக்கும் வரை, உலக மக்கள் இருக்கும் வரை இருக்கும். நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு முதல் குரல் கொடுத்தவர் இவர்தான்.

அ.தி.மு.க. மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது. பிரிந்து இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணம். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா, 50 ஆண்டுகள் ரத்தத்தை சிந்தி வளர்த்த இந்த மாபெரும் இயக்கம், தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை உணர வேண்டும்.

இரட்டை இலை சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தொண்டர்களின் எழுச்சிக்காக தான் அ.தி.மு.க. என்கிற இயக்கத்தை புரட்சித்தலைவர் உருவாக்கினார். பத்து தேர்தல்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த நிலை தொடரக்கூடாது என்று தான் பிரிந்திருக்க கூடிய அ.தி.மு.க. இணைய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தொண்டர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல் தோல்வியின்போதே நான் கூறினேன் தோல்வி ஏற்பட்ட இடத்தில் சென்று நேரடியாக குறைகளை அறிந்து செயல்படுவோம் என்று, ஆனால் யாரும் கேட்கவில்லை.

விக்கிரவாண்டியில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது என்றால், அ.தி.மு.க. வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம். அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும்.

ஜெயலலிதா அ.தி.மு.க.வை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். அ.தி.மு.க மக்களின் அபிப்பிராயத்தை இழந்துள்ளது. படுதோல்வியிலும் பாடம் படிக்கவில்லை என்றால் என்ன செய்வது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வராது " என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Next Story