சென்னை மெரினா கடற்கரையில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள்...கடல் அலையை மிஞ்சிய மக்கள் அலை


தினத்தந்தி 6 Oct 2024 6:38 AM GMT (Updated: 6 Oct 2024 10:19 AM GMT)

சுகோய், ரபேல்,தேஜஸ் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.

சென்னை,

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில், இன்று (அக்.,06) விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்திய விமானப்படை நிறுவன தினம் அக்., 8ல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நாட்டின் பல்வேறு விமானப்படை நிலையங்களில், அணிவகுப்பு ஏற்பாடு தயாராகி வருகிறது. முதல் முறையாக தமிழகத்தில், பிரமாண்ட 'ஏர் ஷோ' இன்று (அக்.,06) காலை 11 மணிக்கு சென்னை, மெரினாவில் துவங்கியது.முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. சுகோய்-30 எம்.கே.ஐ., ரபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எம்.ஐ-17 மற்றும் பிரசாந்த் எல்சிஎச் (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.

பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள் வானில் வலம் வந்தன. மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்தது சேத்தக் ஹெலிகாப்டர்கள். தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தன. இடிமுழக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இந்திய விமானப்படையின் பழமையான டகோடா விமானங்கள் வானை வலம் வந்து சாகசம் புரிந்தன.

வானில் இருந்து போர் புரியும் திறன் உள்ள மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து மிரளச்செய்தன. 2 ஆயிரம் கி.மீ தூரம் செல்லக்கூடிய சி295 விமானம் மெரினா வான் பரப்பில் சாகசத்தில் ஈடுபட்டு சிலிர்க்க வைத்தது. கடலோரப்படையின் பி81 ரக விமானங்கள் மெரினா கடற்கரையில் சாகசம் புரிந்து மக்களை மெய்சிலிர்க்கச்செய்தன. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன.



அனைத்து வானிலை தருணங்களிலும் போர் புரியக்கூடிய சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானம் பாய்ந்து சாகசம் புரிந்தன. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன. தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்தின. மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசம் செய்தன. சாரங் குழுவினரின் ஏஎல்எச்எம் கே-1 ரக ஹெலிகாப்டர்களின் கண்கவர் வான் சாகசத்தை மக்கள் வியந்து பார்த்தனர். அதிர வைக்கும் ஓசையுடன் 5 ஹெலிகாப்டர்கள் புகையை கக்கியப்படி வானில் வலம் வந்தன. வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்ட் வரைந்து பார்வையாளர்களை திகைக்கச்செய்தன. வானில் சுழன்று வந்தும் மேலும் கீழுமாக பறந்தும் கண்களுக்கு ஹெலிகாப்டர்கள் விருந்து படைத்தன.




வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் ஹார்ட் வரைந்து பார்வையாளர்களை திகைக்கச்செய்தன. சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சூரியனை நோக்கியப்படி சீறிப்பாய்ந்து மெய்சிலிர்க்க வைத்தது.சேத்தக் ஹெலிகாப்டர்கள் மெரினாவில் தாழ்வாகப்பறந்து மக்களை புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தியது. வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்களால் மக்கள் பூரிப்படைந்தனர்.

சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் கடல் அலையைக்கூட மிஞ்சும் வகையில் மக்கள் கூட்டம் இருந்தது. கடற்கரையில் குடை பிடித்தவாறு மக்கள் திரளாக கூடியிருந்து, வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்ததாக கூறப்பட்டது.

லட்சக்கணக்கான பொதுமக்கள், சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியைக் காண சென்னை கடற்கரையை நோக்கி படையெடுத்த நிலையில், சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை, அடையாறு மேம்பாலம் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகசகத்தை நேரில் சுமார் 10 லட்சம் பேர் கண்டுகளித்தாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களை கண்டு களித்ததாக கூறப்படுகிறது. மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்சியில் அதிக மக்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். உலகத்திலேயே அதிக மக்கள் பார்த்து ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைக்கிறது சென்னை விமான சாகசம்.





Next Story