விழுப்புரத்தில் மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த சிறுமி


விழுப்புரத்தில் மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த சிறுமி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Aug 2024 11:10 AM GMT (Updated: 11 Aug 2024 11:41 AM GMT)

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி சிறுமி கண் பார்வை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை இரவு 2 மணி வரை வெளுத்து வாங்கியது. பின் மறுபடியும் 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை காலை 6 மணி வரை விடாமல் பெய்தது. இதனால், விழுப்புரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தில் மின்னல் தாக்கி, சிறுமியின் கண்பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெய்த கனமழையின்போது இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதன் விளைவாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட அதிக வெளிச்சம் காரணமாக சிறுமியின் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.

மின்னல் தாக்கிய சிறிது நேரத்தில் சிறுமியின் கண் பார்வை மங்கலாகவே அவர் கதறி அழுதுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் பார்வை முழுவதும் பறிபோனது. சிறுமியின் உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண் பார்வையை திரும்ப கொண்டு வர முடியுமா என மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.


Next Story