சென்னையில் சோகம்: லாரி மோதியதில் பரிதாபமாக பலியான கல்லூரி மாணவி


சென்னையில் சோகம்: லாரி மோதியதில் பரிதாபமாக பலியான கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 6 July 2024 1:39 AM GMT (Updated: 6 July 2024 1:54 AM GMT)

ஆம்புலன்ஸ் வர தாமதமானதே உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்

சென்னை,

சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 24). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச் டி ) வேதியியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஆர்த்தி, ஆராய்ச்சி படிப்புக்காக ரசாயனம் (கெமிக்கல்) வாங்குவதற்கு தனது தோழி ரேணுகாதேவியுடன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் அடையாறு சென்றார். அப்போது மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது.

இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விபத்தில் ஆர்த்தியின் உடை லாரியின் முன்பக்க பம்பரில் சிக்கியது. இதனால் அவர் சாலையில் சிறிது தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டதால், படுகாயம் அடைந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ரேணுகாதேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஆர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தாம்பரத்தை சேர்ந்த மாடசாமி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை கூறும்போது, ``என்னுடைய மகள் கல்லூரியில் இருந்து அடையாறுக்கு தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மெரினா காமராஜர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த எனது மகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவருடைய தோழி ஆம்புலன்சை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் அருகில் உள்ள ஆட்டோவில் எனது மகளை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் எனது மகளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து இருந்தால் எனது மகள் இறந்திருக்க மாட்டாள். மெரினா போன்ற முக்கிய சாலைகளில் ஆம்புலன்ஸ் வர தாமதமானது மிகுந்த வேதனையளிக்கிறது. அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திலும் எனது மகளின் உடலை கொடுக்க தாமதம் செய்கின்றனர். எனது ஒரே மகளை நான் இழந்து விட்டேன். இனி எதிர்காலத்தில் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. விபத்து நடந்த சில நிமிடத்தில் ஆம்புலன்சு சம்பவ இடத்துக்கு செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.


Next Story