ரூ.1 கோடி நஷ்டஈடு: ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியதாக அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 6 பெண்கள் உட்பட 63 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிலர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய உயிரிழப்பில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேகப்படுவதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், நஷ்ட ஈடாக பெறப்படும் பணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.