குரு பலத்திற்கும் திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும்.
பொதுவாக பெண் திருமண வயதை எட்டும் போது பெற்றோர்கள், தங்கள் பெண்ணுக்கு குரு பலம் வந்திருக்கானு முதலில் ஜோதிடரிடம் போய் தெரிஞ்சிட்டுதான் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பார்கள்... குரு பலம் இல்லைனா திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கமாக உள்ளது.ஆனால் குரு பலம் மட்டும் திருமணத்தை தீர்மானிப்பது கிடையாது என்கிறார் ஜோதிடர் ,ஞானரதம் . அவர் கூறியிருப்பதாவது:-
நிறைய பேர் திருமணமே செய்யாம இருக்காங்க ...அவர்கள் வாழ்க்கையில் குரு பலம் வராமலா இருந்திருக்கும்....குரு பலம்னா என்னன்னு கேட்கறது எனக்கு புரியுது. அதாவது கோட்சாரப்படி குரு ஜாதகருடைய ராசியிலிருந்து 2, 5, 7, 9 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது குரு பலம் வருகிறது.
உதாரண ஜாதகம்
கீழே கொடுக்கப் பட்டுள்ள ஜாதகர் கடக ராசி ஆவார். தற்போது இவருக்கு குரு பலம் உண்டா இல்லையா என்றால் உண்டு என்றே சொல்லலாம். காரணம் கடக ராசிக்கு குரு 2 ம் இடத்தில் வந்துள்ளதால் குரு பலம் உண்டு எனலாம்.
அப்படி பார்க்கும் போது தற்போது குரு பலம் உள்ள திருமண வயதில் உள்ள எல்லா கடக ராசி ராசிக்காரருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அல்லவா?
ஒரு சில கடக ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் திருமணம் நடந்தேறுகிறது. மற்றவர்களுக்கு ஏன் நடக்க வில்லை? காரணம் அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புப் படிதான் நடந்தேறும்.ஆகவே, குரு பலத்திற்கும் திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை. எப்படி என்றால் ஒரு ஜாதகருக்கு குரு பலம் சிறு வயதிலும் வரும் நடுத்தர வயதிலும் வரும் வயதான காலத்திலும் வரும். அப்படி இருக்கும் போது குரு பலம் வரும் போதெல்லாம் திருமணம் நடைபெறுவதில்லை.
எனவே, திருமணம் நடைபெறும் காலம் என்று பார்க்கும் போது அவரவர் ஜாதகத்தில் வரும் திசை, புத்தி, அந்தரத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. அதாவது ஜாதகத்தின் படி குடும்பஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம், களத்திரகாரகனான சுக்கிரன், இவ்விடங்களில் வீற்றிருக்கும் கிரகம் மற்றும் இவ்விடங்களைப் பார்க்கும் கிரகத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. மேலும், திருமணஸ்தானங்களான 2 -ம் இடம், 7 -ம்இடம், 9 -ம் இடம் போன்ற இடத்தின் ஸ்தானாதிபதி சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும் அவர்களின் திசை, புக்தி காலங்களிலும் திருமணம் நடை பெறும்.
மேற்சொன்ன விதிகளின் படி குரு சம்பந்தம் பெறுமேயானால் அவர் திசை புக்தி காலங்களிலும் திருமணம் நடை பெறும். அப்படி என்றால் குருவால் என்னதான் பயன் என்று பார்க்கும்போது குருவின் காரகத்துவம் என்ன வென்றால் புத்திரகாரகன், தனகாரகன், ஓழுக்கம், அறிவு விருத்தி அடைவது, உயர் பதவி யோகம் பெறுதல், மரியாதை, ஆசிரியன், ஆலோசனை வழங்குபவர் போன்ற காரகங்களின் அடிப்படையில் குரு பகவான் பலன் தருவார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும். ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் குரு பார்வை இல்லாதவர்கள். குரு பகவானிடம் சரணடைதல் மிகுந்த நன்மையைத் தருவார். அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குரு பகவானை தரிசிப்பது நல்லது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். வியாழன் தோறும் குருபகவானை உள்ளார்ந்து நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது குருவின் அனுகிரகம் கிடைக்கும்.
குரு பகவானின் நிறம் பொன்னிறம் அல்லது மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் குருவினால் உண்டான தோஷங்கள் நீங்கி குருவினால் ஏற்படும் நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக கல்வி விருத்தி அடைதல்,உயர்பதவி கிடைத்தல், தனகாரகன் என்பதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.
குரு புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அல்லது புத்திர தோஷம் உள்ளவர்கள் குரு பகவானை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து குரு பகவானுக்கு அணிவித்தலும் மிகவும் நன்மையைத்தரும்.குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆதலால் சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள குரு ஸ்லோகம், குரு மந்திரம், குரு காயத்ரி உச்சரிப்பதால் குருவின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
குரு சுலோகம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
குரு மந்திரம்
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமாமி பிருகஸ்பதிம்
குரு பகவான் காயத்ரி
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்
வியாழன் தோறும் 30 அல்லது 108 முறை பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.
கட்டுரையாளர்- ஜோதிடர். ந,ஞானரதம்
செல் 9381090389.