இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
முன்விரோத தகராறில் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சந்தியா (வயது 23). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண் என்ற அருண்குமார் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சந்தியா வீட்டில் டியூசன் எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு கத்தியுடன் சென்ற அருண் சந்தியாவின் ஸ்கூட்டரை எட்டி உதைத்து, உங்களை குடும்பத்துடன் தீ வைத்து கொளுத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அருண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.