கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலம்
புதுவையில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி காய்கறி, மளிகை பொருட்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
ரேஷன் கடைகளை திறக்கக்கோரி காய்கறி, மளிகை பொருட்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன்கடை திறப்பு
புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்குவதை தொடர வேண்டும். இலவச மகளிர் பஸ்சை இயக்கவேண்டும். 100 நாள் வேலை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளுக்காக கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்காக அவர்கள் நேருவீதி-மிஷன்வீதி சந்திப்பில் இன்று கூடினார்கள்.
காய்கறி-மளிகை பொருட்கள்
அங்கிருந்து மாநில தலைவர் முனியம்மாள் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் காய்கறிகள், மளிகைப்பொருட்கள், காலி பால் பாக்கெட்டுகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி சென்றனர்.
இந்த ஊர்வலம் மிஷன் வீதி மாதாகோவில் வழியாக ஆம்பூர் சாலை சந்திப்பை அடைந்தது. அதற்கு மேல் அவர்களை செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் இளவரசி, துணைத்தலைவர் சத்தியா, துணை செயலாளர் உமாசாந்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் தாட்சாயிணி, பரிமளா, ஜானகி, சிவசங்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.