அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை
கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திருநள்ளாறு
கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சாலை அமைக்கும் பணி
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு, பேட்டை, குமாரகுடி, சுப்பராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளன. இந்த சாலைகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.6 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
கிராம மக்கள் முற்றுகை
அப்போது சுப்புராயபுரம் பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திடீரென பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை முற்றுகையிட்டனர். அவர்கள், கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுவதாகவும், சாலையில் செம்மண் கொட்டப்பட்டுள்ளதால் வீடுகளின் முன் படிந்து சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் எற்படுவதாகவும் முறையிட்டனர்.
எனவே சாலை அமைப்பதற்கு முன்பாக கழிவுநீர் கால்வாய் வசதியை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.