அரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம்
நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயம் அடைந்தார்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கத்தில் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நெட்டப்பாக்கம், மடுகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று வழக்கம்போல் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றது. பிளஸ்-1 வகுப்பறையில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று கழன்று கீழே விழுந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர்.
மின்விசிறி விழுந்ததில் மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த மாணவர் தனதர்ஷனுக்கு கண் அருகில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக ஆசிரியர்கள், அந்த மாணவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மின்விசிறி கழன்று விழுந்து மாணவர் காயமடைந்தது குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.