ரவுடி கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 6 பேர் கைது

அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
உறவினர் வீட்டில் தஞ்சம்
புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற பொடிமாஸ் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சரத்குமார் ஊருக்குள் நுழைய லாஸ்பேட்டை போலீசார் தடை விதித்திருந்தனர். எனவே அரியாங்குப்பம் (தெற்கு) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் அருகில் உள்ள உறவினர் வெங்கடேசன் வீட்டில் சரத்குமார் தஞ்சம் அடைந்திருந்தார்.
வீடு புகுந்து கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்குள் புகுந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரத்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மேற்பார்வையில் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சிறப்பு புலனாய்வு படையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
6 பேர் அதிரடி கைது
இந்த தனிப்படையினர் நடத்திய அதிரடி விசாரணையில் ரவுடிகள் இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன் தலைமையிலான கும்பல் சரத்குமாரை படுகொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான ரவுடி ஜனா (32), சவுந்தர் (29), கிருஷ்ணராஜ் (30), சந்துரு (23), பெரிய காலாப்பட்டை சேர்ந்த நாகராஜ் (30), அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த சந்தானம் (24) ஆகிய 6 பேரை இன்று காலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வேலைவீசி தேடி வருகின்றனர்.
முந்திக் கொண்டனர்
கைதானவர்களிடம் சரத்குமார் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது தரப்பினரை வெடிகுண்டு வீசி கொல்ல சரத்குமார் சதி திட்டம் தீட்டியதாகவும், இதை அறிந்து ஜனா தரப்பினர் முந்திக் கொண்டு அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.
பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த கொலையில் மேலும் பலர் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சரத்குமாரின் உடல் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று காலை கருவடிக்குப்பம் ஈடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






