மூதாட்டி கொலையில் உறவினர் கைது
புதுச்சேரியில் கழுத்தை அறுத்து மூதாட்டியை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கழுத்தை அறுத்து மூதாட்டியை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி கொலை
புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் கம்பர் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி அஞ்சலை (வயது 80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புருஷோத்தமன் இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஒரு வளர்ப்பு மகள் உள்ளார். அவரும் வெளிநாடு சென்று விட்டார். இதனால் அஞ்சலை மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் பூட்டிய வீட்டுக்குள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அஞ்சலை அணிந்திருந்த கம்மல், வளையல் ஆகிய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
போலீசார் அதிரடி விசாரணை
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் அதிரடி விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் துப்பு துலங்கவில்லை.
இதனைதொடர்ந்து அஞ்சலையின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கடலூர் மாவட்டம் குமாரபனையன்பேட் பகுதியை சேர்ந்த அஞ்சலையின் அண்ணன் கந்தவேலு மகன் சுரேஷ் (50) என்பவர் புதுச்சேரி வந்து சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து விசாரித்ததில் பணம், நகைக்காக அஞ்சலையை கழுத்தை அறுத்து கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கொலை செய்தது ஏன்?
போலீசில் சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். அவ்வப்போது எனது தந்தையிடம் பணத்தை திருடி மது குடித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் உள்ள அத்தை வீட்டிற்கு வந்து தங்கி இருந்தேன். அவரிடம் செலவுக்கு பணம் கேட்டேன். ஆனால் அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் தர முடியாது என்றதுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்து அங்கிருந்த கத்தியை எடுத்து அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்தேன். கம்மல், வளையல் உள்ளிட்ட 53 கிராம் நகைகளை எடுத்துக் கொண்டு கடலூர் சென்றேன்.
அங்கு வங்கியில் ரூ.2½ லட்சத்திற்கு அடகு வைத்தேன். அதில் குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்று 2 நாட்கள் தங்கி இருந்து ஆடம்பரமாக செலவு செய்தேன். அதன்பின் கடலூர் திரும்பி வந்த போது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.