கோவா கவர்னர், முதல்-மந்திரியுடன் புதுவை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு


கோவா கவர்னர், முதல்-மந்திரியுடன் புதுவை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
x

கோவா கவர்னர், முதல்-மந்திரியை புதுவை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள்.

புதுச்சேரி

கோவா கவர்னர், முதல்-மந்திரியை புதுவை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள்.

கவர்னருடன் சந்திப்பு

புதுவையில் புதிதாக சட்டசபை கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக கோவா மாநில சட்டசபை வளாகத்தை பார்வையிட புதுவை எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் செல்வம் தலைமையில் கோவா சென்றுள்ளனர்.

இன்று அவர்கள் கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்-ஐ சட்டசபையில் சந்தித்து பேசினார்கள். அப்போது சட்டசபை வளாகம், கூட்ட அரங்கு, அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதன்பின் கோவா மாநில கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையை கவர்னர் மாளிகையில் புதுவை எம்.எல்.ஏ.க்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

விமர்சனம்

இந்த பயணம் தொடர்பாக புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கருத்து தெரிவித்திருந்தார். அவர், சட்டசபையின் கட்டிட மாதிரி தயாரான பின் எதற்காக கோவா செல்ல வேண்டும்? சூதாட்ட விடுதியை பார்வையிட்டு கொண்டுவரத்தான் இந்த பயணம் என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் செல்வம், இந்த பயணத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்படியானால் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

புறக்கணிப்பு

இது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் எப்போதும் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்றும், சபாநாயகரின் இந்த கருத்தை எதிர்ப்பதாகவும், தாங்கள் கோவா நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.

கோவா சென்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இன்றைய நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.


Next Story