பல இடங்களில் நாள் முழுவதும் மின் தடை


பல இடங்களில் நாள் முழுவதும் மின் தடை
x

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் போராட்டத்தால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் போராட்டத்தால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின் தடையால் பாதிப்பு

புதுச்சேரி மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு, பழுது நீக்கம் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி மேலாகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலைமறியல்

இதற்கிடையே குடியிருப்புவாசிகள் மாலை 6.30 மணி அளவில் அஜந்தா சிக்னலில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மின்வினியோகம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

உத்திரவாகினிபேட், சுல்தான்பேட்

இதேபோல் வில்லியனூர் அருகே உத்திரவாகினிபேட் அம்பேத்கர் நகர் பகுதியில் காலை மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 7 மணி ஆகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒதியம்பட்டு-வில்லியனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

மேலும் சுல்தான்பேட்டையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி மேலாகியும் மின்தடை நீடித்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் சிவா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். புதுச்சேரியில் இன்று 3 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

பூமியான் பேட்டை

இதுபோல பூமியான்பேட்டை குடியிருப்பு பகுதியில் காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணிக்கும் மேலாக மின் தடை இருந்தது. அதையொட்டி அப்பகுதி மக்கள் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இரவு 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். ரெட்டியார்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

1 More update

Next Story