உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தள்ளிவைப்பு
புதுவையில் உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி
உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறுகிறது.
உதவியாளர் பணியிடங்கள்
புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அதன் மூலம் நிரப்பவேண்டும் என்று மேல்நிலை எழுத்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாததால் மேல்நிலை எழுத்தர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே உதவியாளர் பணியிடங்களை துறை ரீதியிலான போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான உத்தரவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இந்த தேர்வுகள் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தள்ளிவைப்பு
இதற்கும் மேல்நிலை எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்வு நடத்துவதற்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் சிலர் தவறான தகவல்களை அரசுக்கு கொடுப்பதாகவும், அவர்கள் போட்டித்தேர்வுக்கான கோச்சிங் சென்டர் நடத்துவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் போட்டித்தேர்வுகள் நடைபெறும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட அனுமதிசீட்டு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.