பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க திட்டம்


பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க திட்டம்
x

பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க புதுவை அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுச்சேரி

பேட்டரி வாகனங்களுக்கு வரி விதிக்க புதுவை அரசு திட்டமிட்டு உள்ளது.

சாலை வரியை உயர்த்த...

தமிழகத்தில் சாலைவரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையிலேயே சாலை வரி விதிக்கப்படுகிறது. அதன்பின் திருத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்த வரி உயர்வினால் தமிழகத்துக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் உயர்வா?

அதேநேரத்தில் புதுவையிலும் சாலை வரி உயர்த்தப்படுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை உயர்த்தினால் மாநிலத்துக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற எதிர்ப்பும் உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டுதான் சாலை வரியில் திருத்தம் (வரி உயர்வு) கொண்டுவரப்பட்டது. அதனால் தற்போது சாலை வரியை உயர்த்தும் எண்ணம் எதுவும் அரசிடம் இல்லை.

பேட்டரி வாகனங்கள்

அதேநேரத்தில் மின்சார வாகனங்களுக்கு (பேட்டரி வாகனங்கள்) வரிவிதிக்கும் திட்டம் உள்ளது. ஏனெனில் தற்போது பேட்டரி வாகனங்களுக்கு 5 வருடங்களுக்கு வரி விதிப்பது இல்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை கண்டுபிடித்து வரி விதிப்பதும் கஷ்டமான காரியமாக இருக்கும். பிற மாநிலங்களில் பேட்டரி வாகனங்கள் வாங்கும்போதே 50, 75 சதவீதம் என தள்ளுபடி செய்து குறைந்த வரி விதிக்கப்படுகிறது.

அதேபோல் பேட்டரி வாகனங்கள் வாங்கும்போதே வரி விதிக்கலாமா? என்று திட்டம் உள்ளது. மேலும் பிற வாகனங்களுக்கு தற்போது அதன் திறன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. அதை விலையின் அடிப்படையில் வரி விதிக்கலாமா? ஆலோசனையும் உள்ளது. இதுதொடர்பாக அரசு செயலாளர்கள், அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோர்தான் கலந்து முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு ஆணையர் சிவக்குமார் கூறினார்.

விற்பனை அதிகரிக்கும்

தமிழகத்தில் சாலை வரி உயர்த்தப்பட்டது புதுவைக்கு ஒரு விதத்தில் லாபகரமானதாகவே இருக்கும் என்று அரசு வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் வாகனங்களின் விலை உயரும்போது புதுவையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கடந்த காலங்களைப்போல் மீண்டும் புதுவையில் வாகனங்களை வாங்க அக்கறை காட்டுவார்கள்.

இதனால் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரிகளை அதிகரிக்காமலேயே கூடுதல் வருவாயை பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


Next Story