பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது
வில்லியனூர் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடித்து புதுச்சேரி கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி
வில்லியனூர் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடித்து புதுச்சேரி கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பா.ஜ.க. பிரமுகர் கொலை
வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் (வயது 46). இவர் கடந்த மார்ச் மாதம் வில்லியனூரில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் செந்தில்குமரன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் திருக்காஞ்சியை சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தம் (35), அவரது கூட்டாளிகள் கொம்பாக்கம் சிவசங்கர் (23), கோர்க்காடு ராஜா (23), கார்த்திகேயன் (23), தனத்துமேடு வெங்கடேஷ் (25), கடலூர் கிளிஞ்சிகுப்பம் பிரதாப் (24), அரியாங்குப்பம் விக்னேஷ் (26) உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வில்லியனூர் பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி, இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர்.
2,250 பக்க குற்றப்பத்திரிகை
இந்தநிலையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் விசாரணையை முடித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. டி.ஜி.பி. ரஞ்சித் சிங் 2,250 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்தியானந்தத்தின் அண்ணனான ராமநாதன் தவிர 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.