சமீபகாலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன - தமிழிசை சவுந்தரராஜன்


சமீபகாலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன - தமிழிசை சவுந்தரராஜன்
x

சமீபகாலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கடற்கரை காந்தி திடலில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் உகந்த உணவு திருவிழா நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது,

புதுவை மாநிலத்தை பொறுத்தமட்டில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நிர்வாக ரீதியாக சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். நான் கவர்னராக என்னுடைய பணியை இரவு பகலாக புதுவை மாநிலத்துக்காக ஆற்றி வருகிறேன்.

என்னை பொறுத்தமட்டில் இந்த அரசு மக்களுக்கு என்னென்ன நல்லது செய்கிறதோ அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். வெள்ள நிவாரண நிதி, முதியோர் உதவித்தொகை, எதுவாக இருந்தாலும் மக்களுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு உடனே கையெழுத்திடுகிறேன். எனது மனசாட்சிப்படி செயல்படுகிறேன்.

பிரதமர் கூறியதைப்போல் பெஸ்ட் புதுச்சேரியாக எல்லா விதத்திலும் புதுவை பயனடைந்து வருகிறது. நிதியை பொறுத்தவரை நிர்வாக ரீதியாக யார்யார் எப்படி செய்யவேண்டும்? என்ற வரைமுறை உள்ளது. எனது முயற்சியினாலும், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முயற்சியினாலும் புதுச்சேரி நிச்சயமாக பிரம்மாண்ட வளர்ச்சியை பெறப்போகிறது.

விமர்சனங்களை நான் எதிர்ப்பதில்லை. அதை ஏற்கவே செய்கிறேன். சமீப காலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன. காய்த்த மரம்தானே கல்லடி படும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


Next Story