இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முற்றுகை போராட்டம்
இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தை அடிப்படை வசதி செய்து தரவிட்டால் 18-ந் தேதி முற்றுகை போராட்டம் நடந்த விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் அறிவிந்துள்ளனர்.
புதுச்சேரி
புதுவை மாநில விளையாட்டு வீரர் நலச்சங்கத்தின் கூட்டம் மாநில தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், சந்தோஷ், ஆறுமுகம், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று தனி விளையாட்டுத் துறையை புதுவை அரசு அவசர கதியில் அறிவித்துள்ளது, எனவே அரசு விளையாட்டுத் துறையில் இணைத்துள்ள என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யூத் ஹாஸ்டல், நேரு யுவகேந்திரா, சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றை நீக்கி விளையாட்டை மட்டும் முன்னிலைப்படுத்தி தனி துறை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சேர வேண்டிய பணத்தை நேரடியாக அரசு வழங்க வேண்டும்.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம், ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். இந்த வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் வருகிற 18-ந் தேதி மாலை இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தை இழுத்து பூட்டி, மலர் வளையம் வைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.