ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொருளாதார வளர்ச்சி
புதுவையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கவர்னர் கவுரவிப்பு
மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. ஆணையரகம் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்றுப் பேசினார்.
விழாவில் அதிக அளவில் வரி செலுத்தியவர்கள், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறு தொழிலுக்கு உதவி
ஜூலை 1-ந்தேதி என்பது கணக்கு பார்ப்பவர்களின் தினமாக உள்ளது. குறிப்பாக பிறரது வாழ்க்கையை கணக்கு பார்க்கும் டாக்டர்கள் தினம், வருமான கணக்கு பார்க்கும் பட்டய கணக்காளர் தினம், நாட்டின் வருமானத்தை கணக்கு பார்க்கும் ஜி.எஸ்.டி. தினம் ஆகிய 3 தினங்கள் ஒரே நாளில் வருகிறது.
ஜி.எஸ்.டி. வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதுவையில் கடந்த ஆண்டைவிட ரூ.166 கோடி கூடுதல் வருமானம் வந்துள்ளது. ஆனால் இந்த வரிவிதிப்பு முறை வந்தபோது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. முன்பு 16 வகையான வரி கட்டி வந்தோம். இப்போது அவற்றை ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி. வரி வந்தது. இந்த வரி சிறுதொழிலுக்கு உதவியாக உள்ளது. ஜனநாயக முறைப்படி அனைத்து மாநில நிதி மந்திரிகளின் ஆலோசனைகளை கேட்டு கோரிக்கைகளை பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
இப்போது சாதாரண மக்கள் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, சினிமா, பாலீஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த வரிவிதிப்பு முறை உள்ளது. இந்தியாவுக்கு எப்போது வரும்? என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனை நல்லமுறையில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களுக்கு உரிய முறையில் கொடுத்தால்தான் புரியும். பெட்ரோல், டீசலையும் இந்த வரிவரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்கிறார்கள். அதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
லட்சுமிநாராயணன்
அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி. மூலம் எதிர்பார்ப்பதை விட அதிக வருவாய் வருகிறது. இதற்கு முன்பு ஒவ்வொரு வரி தொடர்பான கணக்குகளும் தனித்தனியாக இருந்தது. அவை இப்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது 16 விதமான சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் வணிகர்கள் ஜி.எஸ்.டி. உச்சவரம்பினை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்த கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரிவசூல் வருடந்தோறும் 29 சதவீதம் உயர்ந்து வருகிறது. யாருக்கும் நெருக்கடி கொடுக்காமல் வரி வருமானம் பார்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் கூடுதல் ஆணையர் பிரசாந்த்குமார் நன்றி கூறினார்.
விழாவில் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 12-ம் வகுப்பு மாணவிகள் அருள்விழி, தர்ஷினி ஆகியோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
-