குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்
புதுச்சேரியில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
உருளையன்பேட்டை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமை தாங்கினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் வம்சிதர ரெட்டி, சுவாதி சிங், பக்தவச்சலம், வீரவல்லபன், ஜிந்தாகோதண்டராமன் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உத்தரவு
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா பேசுகையில், 'புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனை தடுக்க கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜாமீனில் வெளியே வரமுடியாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க துரிதமாக செயல்பட வேண்டும்' என்றார்.