சுதந்திர போராட்ட தியாகி கவுரவிப்பு
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகி கவுரவிக்கப்பட்டார்.
காரைக்கால்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகி கவுரவிக்கப்பட்டார்.
தியாகி கவுரவிப்பு
இந்திய அரசின் மத்திய உள்துறையின் 'ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மான் யோஜனா' (எஸ்.எஸ்.எஸ்.ஒய்), புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சென்று கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ராமச்சந்திரனை கலெக்டர் குலோத்துங்கன், இன்று அவரது வீட்டிற்கு சென்று கவுரவித்து கலந்துரையாடினார்.
அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டம் குறித்தும், அதில் அவர் பங்கேற்ற தருணம், தற்போதைய நிலை குறித்தும் பேசினார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் இருந்து அனுப்பி வைத்த நினைவுப்பரிசை அவருக்கு வழங்கினார்.
நம் மண், நம்நாடு
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், 5 நாட்கள் "நம் மண், நம்நாடு" என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழா நகராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ், நகராட்சி ஆணையர் சத்யா, நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
75 குளக்கரையில் மரக்கன்று
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில்,''நம் மண், நம்நாடு" என்ற திட்டத்தின் மூலம், காரைக்காலில் 75 குளங்கள் கண்டறியப்பட்டு, வருகிற 15-ந் தேதி மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மேலும் காரைக்கால் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகளை கவுரவித்தல், இந்தியா முழுவதும் 7,500 இடங்களில் இருந்து புனித மண் எடுத்து செல்லும் நிகழ்வுகளில் ஒன்றாக, காரைக்காலில் இருந்து முக்கிய இடங்களில் புனித மண் சேகரித்து டெல்லிக்கு கொண்டு சென்று சேர்த்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் இசைக்கவேண்டும்' என்றார்.