பழக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
புதுவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடை மற்றும் ஜூஸ் கடைகளில் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி
புதுச்சேரி பழைய பஸ் நிலையத்தில் பழக்கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு கடையில் அழுகிய பழங்களை ஜூஸ் போட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாடிக்கையாளர் ஒருவர் இன்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் இன்று பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடை மற்றும் ஜூஸ் கடைகளில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்குள்ள பழக்கடை ஒன்றுக்கு உணவு உரிமம் இல்லாததும், அழுகிய பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும், கடைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன், அந்த கடையின் உரிமையாளரிடம் ஒருநாள் கடையை மூடி அழுகிய பழங்களை அப்புறப்படுத்தவும், கடையை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டார். மேலும் அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும், விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.