நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால்
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மீன்பிடி துறைமுகம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தவேண்டும். முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இன்று 11-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் நேரில் சந்தித்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால், போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் வழங்கிய கடிதத்தில் மீனவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
புறக்கணிக்க முடிவு
இதைத்தொடர்ந்து இன்று காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்தை விரிவுப்படுத்தவேண்டும். முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் இ.பி.சி. பிரிவில் இருந்து எம்.பி.சி. பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்வது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.