விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும்
முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
காரைக்கால்
முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காமராஜர் அரசு வளாகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
பயிற்சி கலெக்டர் சம்யக் ஷி ஜெயின், கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
வெள்ள நிவாரணம்
கடந்த மாதம் விவசாயிகள் பலர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஒரு சில இடங்களில் பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால், கலெக்டர் தனி கவனம் செலுத்தி அனைத்து பன்றிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பருத்திக்கான விலையை அரசு உயர்த்தி தரவேண்டும். நிலுவையில் உள்ள 437 விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
100 நாள் வேலையை பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அளிக்க வேண்டும். தற்போது அந்த பணி அளிப்பதால், பருத்தி எடுப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. சணல் சாக்கில் இருந்தால் தான் பருத்தி வாங்குவோம் என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகள் அலைகழிப்பதை கலெக்டர் சரி செய்ய வேண்டும் என்றனர்.
விவசாய கடன் தள்ளுபடி
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், கடந்த 2021-22-ம் ஆண்டு ரூ.11 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். ஆனால் அது குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த 40 ஆயிரம் விவசாயிகள் கூட்டுறவு கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும் என்றார்.
வாய்க்கால்கள் தூர்வாரப்படும்
கூட்டத்தில் பேசிய கலெக்டர் குலோத்துங்கன், காரைக்காலில் உள்ள 64 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் வரை 23 வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் 14 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவும் மீதமுள்ள வாய்க்கால்கள் 15 நாட்களுக்குள் தூர்வாரி முடிக்கப்படும், பருத்தி, நெல் கொள்முதல் சம்பந்தமாக புதுவைக்கு கோப்புகள் சென்றுள்ளன. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். காரைக்கால் மாவட்டத்தில் போதிய அளவு விதைநெல் இருப்பில் உள்ளது. விவசாயிகள் கேட்கும் அனைத்து விதைகளும் அளிக்கப்படும் என்றார்.