சனாதனத்தை எதிர்க்கும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா?


சனாதனத்தை எதிர்க்கும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா?
x

சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி

சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ.ராசாவால் தி.மு.க. தலைவராக முடியுமா? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

மாரத்தான் போட்டி

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கடற்கரை சாலையில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கடற்கரை சாலையில் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பங்கஜ் குமார் ஜா, இயக்குனர் ஸ்ரீராமுலு, திட்ட இயக்குனர் சித்ரா தேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மொத்தம் 5 கி.மீ. தூரம் உள்ள இந்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

45 சதவீத இளைஞர்கள்

எய்ட்ஸ் பற்றி ஒரு தவறான பார்வை ஏற்படுத்தப்படுவதால் இதைப்பற்றிய விழிப்புணர்வு தேவையான ஒன்றாக இருக்கிறது. அரசின் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் 45 சதவீதத்திற்கு மேல் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விழிப்புணர்வில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் அது சரியாக இருக்கும் என்று பொதுமக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பெறுபவர்கள் வருகிற அக்டோபர் 8-ந் தேதி கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான மராத்தான் போட்டியில் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. தலைவராக முடியுமா?

சனாதனத்தின் மூலம் தான், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், அண்ணாமலையும் பதவியில் இருப்பதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். அவர் சனாதனத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார். சனாதன ஒழிப்பு மூலம் சாதியை ஒழிப்பதாக கூறும் சூழலில் ஆ.ராசாவால் அவரது கட்சியில் (தி.மு.க.) தலைவராக முடியுமா? முதல்-அமைச்சராகி விடுவாரா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.

நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன்.

விளம்பரம் தேடுவதா?

சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது. விளம்பரத்திற்காக சிலர் சனாதனம் பற்றி பேசுகின்றனர். ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதியை கேட்காதீர்கள்.

தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதல்-அமைச்சர் பதவி தர மறுக்கிறீர்கள்? உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story