ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
புதுச்சேரி மணக்குள விநாயகர் மற்றும் திருக்காஞ்சி கோவில்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தையும் அவர் பார்வையிட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி மணக்குள விநாயகர் மற்றும் திருக்காஞ்சி கோவில்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தையும் அவர் பார்வையிட்டார்.
மணக்குள விநாயகர் கோவில்
புதுவைக்கு அரசு முறை பயணமாக வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை 4 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் சாமி கும்பிட்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவ விநாயகர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார். கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாமி தரிசனம் முடிந்து அங்கிருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
கைவினை கிராமம்
அதைத்தொடர்ந்து புதுவை- கடலூர் சாலையில் உள்ள முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திற்கு மாலை 4.50 மணிக்கு சென்றார். அங்கு சுற்றுலாத்துறை சார்பில் தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், மாகி செண்டை மேளம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
அதையடுத்து கைவினை கிராமத்தில் உள்ள கைவினைஞர்களின் கடைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். கைவினைஞர்களில் பெண்கள் அனைவரும் பாரம்பரிய பட்டுச்சேலையும், ஆண்கள் வேட்டி, சட்டையும் அணிந்திருந்தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி திருவள்ளுவர் சிலையையும், ஓவியர் அரியபுத்திரி திரவுபதி முர்முவின் பென்சில் ஓவியத்தையும் ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக நுழைவு வாயிலில் ஜனாதிபதியின் மணல் சிற்பம், ரங்கோலி கோலத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் மாலை 5.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.
திருக்காஞ்சியில் கங்கா ஆரத்தி வழிபாடு
பின்னர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு மாலை 5.25 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் உட்பிரகாரத்தை ஜனாதிபதி முர்மு வலம் வந்தார்.
பின்னர் சங்கராபரணி ஆற்றங்கரை படித்துறைக்கு சென்றார். அங்கு பஞ்சதீபம் ஏற்றி கங்கா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கங்கா ஆரத்தியை ஜனாதிபதி வழிபட்டார். முன்னதாக திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஸ்தல வரலாறு குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அவருக்கு கோவில் சார்பில் நினைவுப்பரிசும், ஸ்தல வரலாறு குறித்த புத்தகமும் வழங்கப்பட்டது.
கவர்னர் விருந்து
நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, அரசு தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் குமார், கேசவன், கலெக்டர் வல்லவன், போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலில் தரிசனம் முடிந்து மாலை 6.05 மணிக்கு மீண்டும் புதுவை கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு திரும்பினார். இரவு கவர்னர் மாளிகையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த விருந்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.