புதுச்சேரியில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம்

புதுச்சேரியில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைக்கிறார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை திறந்து வைக்கிறார்.
சைபர் கிரைம்
புதுச்சேரி காவல்துறையில் சைபர் கிரைம் போலீஸ் கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புதுவை சி.பி.சி.ஐ.டி.யுடன் இணைந்து சைபர் கிரைம் இயங்கி வந்தது. இந்தநிலையில் நாளுக்கு நாள் அதிகரித்த சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வந்தன.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போதிய நவீன தொழில்நுட்ப வசதி மற்றும் ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சைபர் கிரைம் போலீசார் திணறி வந்தனர். இந்தநிலையில் சைபர் கிரைம் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனியாக போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
திறப்பு விழா
அதன்படி புதுவை கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. புதிய சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ் வர்மா, புதுவை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த சைபர் கிரைமில் தற்போது 2 இன்ஸ்பெக்டர்கள், 1 சப்-இன்ஸ்பெக்டர், 9 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் 6 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 13 காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்க ரூ.2 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.






