அரசு நிகழ்ச்சியில் சந்திரபிரியங்கா பங்கேற்பு
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்கா காரைக்காலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தேசியகொடி கட்டிய காரில் வந்து கலந்துகொண்டார்.
திருநள்ளாறு
புதுவையில் ஒரே பெண் அமைச்சராக வலம் வந்த சந்திரபிரியங்கா கடந்த 9-ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக கவர்னர், முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். சாதி, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் மற்றும் சபாநாயகர் தெரிவித்து இருந்தனர். மேலும் அவரது பணியில் திருப்தி இல்லாததால் முதல்-அமைச்சர் தான் பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கூறப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சந்திரபிரியங்கா தனது பதவி காலத்தில் செய்த சாதனைகள், அவரை கவர்னர் பாராட்டியது போன்ற 9 பக்க கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சந்திரபிரியங்காவுக்கு பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
போலீஸ் பாதுகாப்பு
பொதுவாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனடியாக வெளியிடப்படும். ஆனால் சந்திரபிரியங்கா விவகாரத்தில் 10 நாட்களுக்கு மேலாகியும் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவர் வகித்து வரும் துறைகள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அவரது வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு சென்ற சந்திரபிரியங்காவின் கணவர் சண்முகத்தை போலீசார் அனுமதிக்கவில்லை.
சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? மத்திய அரசு அதனை ஏற்றுக்கொண்டதா? என்று பெரும் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில், பதவி நீக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சிலர் பதிவிட்டு இருந்தனர்.
அரசு விழாவில் பங்கேற்பு
இந்த நிலையில் இன்று காரைக்கால் பஞ்சாட்சரபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சியில் சந்திரபிரியங்கா கலந்துகொண்டார். அவரை அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சந்திர பிரியங்கா வழங்கினார். இந்த விழாவில் அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விழா குறித்து சந்திரபிரியங்கா தொடர்புடைய வாட்ஸ் அப் குரூப்பில் இருந்த பதிவில், புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 'மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா' என்பது கொட்டை எழுத்துக்களில் காணப்பட்டது.
மீண்டும் பரபரப்பு
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர், முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் காரைக்காலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் சந்திரபிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது