அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புகளால் அரங்கேறும் உயிர்ப்பலிகள்

7 பேரை காவு வாங்கிய ரெட்டியார்பாளையம் பகுதியில் அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புகளால் உயிர்ப்பலிகள் தொடர்வதை தடுக்க அரசு நடவடிக்கை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி
7 பேரை காவு வாங்கிய ரெட்டியார்பாளையம் பகுதியில் அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புகளால் உயிர்ப்பலிகள் தொடர்வதை தடுக்க அரசு நடவடிக்கை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாகன நெரிசலால் திணறல்
சுற்றுலா பயணிகளால் கொண்டாடப்படும் புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் விபத்தும் பிரிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. அதிலும் வார இறுதி நாட்களில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே முடியாது. அந்த அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கையால் நகரம் முழுவதுமே திக்குமுக்காடி போய் விடும்.
நகரின் இருதயமாகவும், முக்கிய நுழைவாயில் சந்திப்பாகவும் உள்ள இந்திராகாந்தி சிலை பகுதி வெயிலானாலும், மழையானாலும் எந்த காலத்திலும் வாகனங்களின் அணிவகுப்பால் திணறித்தான் போகும்.
இந்திராகாந்தி சிலை சந்திப்பில் இருந்து மூலக்குளம் வரை ஆக்கிரமிப்பின் பிடியிலும், அடுத்தடுத்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களிலும் சிக்கி தேசிய நெடுஞ்சாலை என்பதற்கான அடையாளத்தை இழந்து நிற்கிறது.
அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புகள்
அலுவலக நாட்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு இந்த வழியாக செல்வோரின் நிலைமை அதோகதி தான். அந்த வகையில் இந்த சாலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை தான் இருந்து வருகிறது.
வர்த்தக கட்டிடங்கள், கடைகள், அலுவலகங்கள் அதிகம் காணப்படும் ரெட்டியார்பாளையத்தில் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் விபத்து தவிர்க்க முடியாததாக அச்சுறுத்தி வருகிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 7 பேர் உயிர்ப்பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து ஊனத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பலியானவர்கள் விவரம்
அதாவது, விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் இருந்து புதுச்சேரியில் நடந்த அண்ணன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி மளிகைக் கடைக்காரர் முத்துக்குமாரசாமி காரில் வந்தார். காரை டிரைவர் முத்து ஓட்டி வந்தார்.
அன்றைய தினம் அதிகாலை ரெட்டியார்பாளையம் பகுதியில் வந்த போது எதிரே வில்லியனூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி தடுப்புக்கட்டையை உடைத்துக் கொண்டு கார் மீது மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் சிந்திய ரத்தம் காய்வதற்குள் மறுநாள் (ஜூன் 2-ந்தேதி) காந்தி திருநல்லூரை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் ராஜவள்ளி ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
அதே மாதத்தில் முன்னும் பின்னுமாக அதே பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த திருக்காஞ்சியை சேர்ந்த தமிழ்செல்வன், உழவர்கரை நண்பர்கள் நகரை சேர்ந்த ஜெயப்பிரகாசம், குரும்பாப்பேட்டை சேர்ந்த பழனிவேல் ஆகியோர் விபத்துகளில் சிக்கி பலியாயினர்.
அதன்பிறகும் போக்குவரத்து போலீஸ், பொதுப்பணி துறை உள்ளிட்ட அரசு துறைகள் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்த பாடில்லை.
6-ம் வகுப்பு மாணவன் சாவு
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி பாவாணர் நகரைச் சேர்ந்த பன்னீர் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் கிருஷ்வாந்தை (11) மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டே போது கிருஷ்வாந்த் வலது புறமாகவும், பன்னீர் இடது புறமாகவும் சரிந்து விழுந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் சக்கரம் ஏறியதில் கிருஷ் வாந்த் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தன் கண் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் பன்னீர் கதறி துடித்தார். எதுவுமே தெரியாத பிஞ்சு பலியானதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போயினர்.
இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. ஊடகங்களிலும் பதிவானது. இதனால் கொந்தளித்த பொதுமக்கள், ரெட்டியார்பாளையம் பகுதியில் தொடர் மரணங்கள் ஏற்படுவதை தடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அரசு கண்துடைப்பு
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் அரசு எந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு ரெட்டியார்பாளையம் சாலையில் இருந்து கடை ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் வாய்க்கால்களின் மீதான சிமெண்டு சிலாப்புகள், கட்டிடங்கள் முன் இருந்த வாசல் படிக்கட்டுகளை உடைத்தனர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே சுமார் 100 அடி தூரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடந்து போன கோர சம்பவத்தை மறக்கச் செய்ய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருந்துள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் தொடர்ந்து காய்கறி, பழம் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் விற்பனை கடைகள் எந்த தடையும் இன்றி வழக்கம்போல் இயங்கின.
பொதுமக்களும் வாகனங்களை தங்கள் பங்குக்கு தாறுமாறாக ஆங்காங்கே நிறுத்தி இருந்தனர். விபத்துகளில் எத்தனை பேர் பலியானாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனக்கு ஏற்படும் வரை அது வெறும் சம்பவம் என்று கருதுபவர்களை என்னவென்று சொல்வது?
நடுரோட்டில் மின் கம்பங்கள்
ரெட்டியார்பாளையம் சாலை சில இடங்களில் 45 அடியும், சில இடங்களில் 80 அடி வரையும் அகலமாக காணப்படுகிறது.
குறிப்பாக பெருமாள் ராஜா கார்டன் பகுதியில் 80 அடி வரை அகலம் உள்ளது. ஆனால் சாலையின் நடுவிலேயே மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. அதையொட்டி ஆக்கிமிப்பு கடைகள் நெருக்கமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் விடப்பட்டு இருப்பதும் விபத்துக்கு காரணமாகிறது.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காணாமல் பிரச்சினையின்போது மட்டும் தலைகாட்டி விட்டு அரசு துறைகள் ஒதுங்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருவது மாறும் வரை விபத்துகளும், உயிர்ப்பலிகளும் தொடரத் தான் செய்யும் என்பது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.






