பா.ஜ.க.-சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்


பா.ஜ.க.-சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்
x

முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க., சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடந்து வருகிறது.

பதவிகள் விவரம்

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பா.ஜ.க. 6 இடங்களையும் பிடித்தது. அதைத்தொடர்ந்து அமைந்த அரசில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக உள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த செல்வம் சபாநாயகராக உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3, பா.ஜ.க.வுக்கு 2 என அமைச்சர் பதவி வகித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 3 பேர் பா.ஜ.க. ஆதரவு நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க.வுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

பகிரங்க குற்றச்சாட்டு

ஆட்சி அமைந்த நாள்முதலே வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகள் கேட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பா.ஜ.க., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் குடைச்சல் கொடுத்து வந்தனர்.

ஆனால் வாரிய தலைவர் பதவி எதுவும் தராமல் ஆட்சி நிர்வாகத்தில் ரங்கசாமி கவனம் செலுத்தினார். இந்தநிலையில் தங்களது தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து நேரடியாக புகார் தெரிவித்து வந்தனர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது எதிரொலித்தது.

அதாவது, புதிதாக மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரம் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். இதேபோல் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அரசு மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

உண்ணாவிரதம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார் ஆகியோரை பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

இந்தநிலையில் சட்டசபைக்கு நேற்று காலை பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.வான அங்காளன் வந்தார். சட்டசபை கூட்ட அரங்கிற்கு செல்லும் பிரதான வாசல் படிக்கட்டில் அமர்ந்து திடீரென அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் அங்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் வந்தார். அவரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி உண்ணாவிரதம் தொடங்கினார்.

உண்ணாவிரதத்தின்போது நிருபர்களிடம் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

திருப்தி இல்லை

நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எனது தொகுதியில் எந்த பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. நடந்து முடிந்த பணிகளும் திருப்தி இல்லை. வளர்ச்சிப் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தடை செய்கிறார்.

எனது தொகுதியில் வம்புபட்டில் ஒரேயொரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு 6 மாதமாகிறது. ஆனால் அதற்கு இன்னும் மோட்டார் பொருத்தவில்லை. 100 நாள் வேலை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடக்காததால் முதல்-அமைச்சரை கண்டித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன். புதுவையில் பா.ஜ.க. வளரக் கூடாது என்று அவர் எண்ணுகிறார். பா.ஜ.க.வுக்கு நான் ஆதரவாக இருப்பதால் எனது தொகுதியை புறக்கணிப்பதுடன் நான் தானாக பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறார். அதை வெளிப்படையாக அவரது அலுவலகத்தில் வைத்து பேசியுள்ளார்.

ஆட்சி மாற்றம் தேவை

புதுவையில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்ததில் வெளிப்படைத்தன்மை இல்லை. கள், சாராயக்கடைக்குக்கூட இ-டெண்டர் வைக்கின்றனர். அப்படியிருக்க மதுபான தொழிற்சாலைகளுக்கு டெண்டர் வைக்காமல், ஆதாயம் இல்லாமல் எப்படி அனுமதி அளித்திருக்க முடியும்?. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வைக்கவேண்டும்.

இந்த ஆட்சி மாறவேண்டும். இந்த ஆட்சிக்கு பா.ஜ.க.வும் ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பா.ஜ.க. ஆட்சி இங்கு வரவேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கருதுகிறார். அவரது கட்சி வேட்பாளரை தோற்கடித்ததால் காழ்ப்புணர்ச்சியால் என்னை பழிவாங்குகிறார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு தருகின்றனர். பா.ஜ.க. ஆட்சியை தான் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் விரும்புகின்றனர்.

இவ்வாறு அங்காளன் எம்.எல்.ஏ. கூறினார்.

உண்ணாவிரதம் வாபஸ்

இந்தநிலையில் இன்று மாலை 3.30 மணி அளவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அங்கு வந்து உண்ணாவிரதம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், கல்யாணசுந்தரம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் கட்சி மேலிடத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டு சட்டசபை வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story