காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும்
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
காரைக்கால்
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
ரெயில் போக்குவரத்து
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து இருந்தது. போதுமான வருமானம் இல்லாததால் அந்த போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 28 ஆண்டுகளாக காரைக்காலுக்கு ரெயில் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.
இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு காரைக்கால்-நாகூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. மேலும் காரைக்கால்- பேரளம் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக ரெயில் தண்டவாளம், பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மார்ச் மாதம் தொடங்கும்
இந்தநிலையில் இன்று மாலை தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் காரைக்காலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் சேர்ந்து ரெயில்வே பணிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் காரைக்கால்-பேரளம் இடையேயான ரெயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் 'காரைக்கால்- பேரளம் இடையே தண்டவாளம், பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற மார்ச் மாதம் முதல் காரைக்கால்-பேரளம் ரெயில் போக்குவரத்து தொடங்கும்' என்றார்.