ரூ.33½ கோடியில் அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலை பணி


ரூ.33½ கோடியில் அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலை பணி
x

ரூ.33½ கோடி மதிப்பில் அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

ரூ.33½ கோடி மதிப்பில் அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

தீராத போக்குவரத்து நெரிசல்

புதுவை 100 அடி ரோடு, அரும்பார்த்தபுரம் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு அவை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மேம்பாலங்கள் அமையும்போது நகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி என்பது முற்றிலும் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் புதுச்சேரி- விழுப்புரம் சாலை எப்போதும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்த வழித்தடத்தில் பிரமாண்ட கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதால் சாலையை அகலப்படுத்த முடியவில்லை.

புதுவையை உலுக்கிய விபத்து

ரெட்டியார்பாளையம் சாலையில் ஏற்பட்ட விபத்துக்களால் பலர் உயிரிழந்தனர். பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் கிருஷ்வாந்த் பலியான சம்பவம் புதுவை மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணியை உடனே தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

முதலியார்பேட்டை நடேசன் நகர் மேம்பாலம் சந்திப்பில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை 4.5 கி.மீ. தூரத்துக்கு 100 அடி பைபாஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இடத்தை கையகப்படுத்துவதில் சிரமம் இருந்ததால் சாலையின் அகலம் 22 மீட்டராக குறைக்கப்பட்டது.

ரூ.33½ கோடி ஒதுக்கீடு

இதையடுத்து ஒதியம்பட்டு, குரும்பாப்பட்டு, தட்டாஞ்சாவடி வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுமார் 3 கி.மீ. நீளத்துக்கு மண்சாலை அமைக்கும் பணியும் முடிந்தது. இதைத்தொடர்ந்து ரூ.33 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரம் செலவில் ஹட்கோ நிதி உதவியுடன் பைபாஸ் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் மழைநீர் வடிகால் வசதிக்காக 7 சிறிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. 4 முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த பணிகள் முடிந்ததும் அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை வழியாக விழுப்புரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இயக்கப்படும். ஒரு சில டவுண் பஸ்கள் மட்டுமே இந்திரா காந்தி சிலை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம், அரும்பார்த்தபுரம் வழியாக செல்லும்.

பூமி பூஜை

புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடேசன் நகர் மேம்பாலம் சந்திப்பில் இருந்து புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் சந்திப்பு வரையில் ரூ.33 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், கே.எஸ்.பி. ரமேஷ், சிவசங்கர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பைபாஸ் சாலை பயன்பாட்டுக்கு வரும் போது புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.


Next Story