நர்சிங் படிக்க விரும்பாத மாணவி தற்கொலை
புதுவையில் தனியார் கல்லூரியில் சேர்க்க பெற்றோர் ஏற்பாடு செய்த நிலையில் நர்சிங் படிக்க விரும்பாத மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்
தனியார் கல்லூரியில் சேர்க்க பெற்றோர் ஏற்பாடு செய்த நிலையில் நர்சிங் படிக்க விரும்பாத மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வி
கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயப்பிரதா. இத்தம்பதிக்கு கீர்த்தனா (வயது 17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
12-ம் வகுப்பு படித்து பொது தேர்வில் கீர்த்தனா தோல்வி அடைந்தார். பெற்றோர் தொடர்ந்து படிக்க வைக்க ஆசைப்பட்டு கீர்த்தனாவின் 10-ம் வகுப்பு தேர்ச்சியை கொண்டு தனியார் கல்லூரியில் அவரை டிப்ளமோ நர்சிங் படிக்க ஏற்பாடு செய்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆனால், கீர்த்தனாவுக்கு நர்சிங் படிக்க விருப்பமில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் கட்டுமான பணி நடந்து வந்தது. அதையொட்டி, தாயார் தனது உறவினர் வீட்டில் தங்களுக்கு தேவையான உணவு சமைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கீர்த்தனா அங்கிருந்த கொட்டகையில் உள்ள இரும்பு பைப்பில் தனது தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்டு கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.