புவனேசுவரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி
புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கஞ்சா நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து பஸ், ரெயில் மூலமாக கஞ்சா கடத்தி வரப்பட்டு தாராளமாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இருந்து புதுவை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கும்வசதி கொண்ட பெட்டி ஒன்றில் கருப்பு நிற பை கேட்பாரற்று கிடந்தது. இதுதொடர்பாக பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் மதன்பாபு, ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
3½ கிலோ கஞ்சா
அதன்பேரில் போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 3½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். இந்த கஞ்சா பையை ஒதியஞ்சாலை போலீசாரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர்.
ரெயில் நிலையத்தில் போலீசாரின் கெடுபிடி காரணமாக வெளியே கொண்டு வராமல் ரெயிலிலேயே கஞ்சாவை மர்மநபர்கள் விட்டுச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.