ரூ.1 கோடி பம்பர் பரிசு வழங்கும் திட்டம்


ரூ.1 கோடி பம்பர் பரிசு வழங்கும் திட்டம்
x

‘எனது பில் எனது உரிமை’ என்ற ரூ.1 கோடி பம்பர் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி

'எனது பில் எனது உரிமை' என்ற ரூ.1 கோடி பம்பர் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

பரிசு திட்டம்

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. பில்களை கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும்பொருட்டு புதுவை உள்ளிட்ட சில மாநிலங்களில் 'எனது பில் எனது உரிமை' என்ற பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கவிழா புதுவை சட்டமன்ற கேபினெட் அறையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார். பரிசு திட்டத்திற்கான விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் முறையான ஜி.எஸ்.டி. பில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய். சரவணன்குமார், வளர்ச்சி ஆணையர் ஜவகர், வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன், வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நுகர்வோராக...

புதுவையில் செயல்படுத்தப்படும் எனது பில் எனது உரிமை பரிசு திட்டத்தில் புதுச்சேரியில் பொருட்கள் வாங்கும் இந்தியாவின் குடிமகன் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். மேலும் அத்தகையை பொருட்கள் மற்றும் சேவையை பெறுபவர் கண்டிப்பாக நுகர்வோராக இருக்கவேண்டும். ஒரு ஜி.எஸ்.டி. பில்லின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.200 ஆக இருத்தல் வேண்டும்.

ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் வராத பொருட்கள் மற்றும் சேவைக்கான பில்கள் இந்த பரிசு திட்டத்தில் பங்கேற்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் ஒரு ஜி.எஸ்.டி. பதிவுபெற்ற நபர் தனது வியாபாரத்துக்காக மற்றொரு ஜி.எஸ்.டி. பதிவுபெற்ற நபருக்கு விற்ற பொருட்கள் மற்றும் சேவைக்காக வழங்கப்பட்ட பில்கள் பரிசு திட்டத்தில் பங்கேற்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ரூ.1 கோடி பம்பர் பரிசு

இந்த பரிசு திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் நுகர்வோர் தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைக்கான ஜி.எஸ்.டி. பில்களை Mera Bill Mera Adhikaar என்னும் மொபைல் செயலி அல்லது https://web.merabill.gst.gov.in என்னும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதலில் செல்போன் செயலி அல்லது வலைதளத்தில் தங்களை பற்றிய சில விவரங்களை வழங்கி ஒருமுறை மட்டும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

செல்போன் செயலியை கூகுள் பிளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 25 பில்களை பதிவேற்றம் செய்யலாம். இத்திட்டத்தில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 800 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் 10 நபர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும் காலாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் பம்பர் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு பம்பர் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும்.


Next Story